அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
About Us
 

 

 

பேரவையின் துவக்கம்:

ன்பு, நட்பு, மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக் கொண்டு சாதி, சமய, அரசியல் வேறுபாடுகளை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகாம் இந்தியப் பேனாநண்பர் பேரவை 12, மார்ச் 1995-ல் மும்பையில் துவங்கப்பட்டது. துவக்கவிழாவில் மும்பையின் பெருமைமிகு தமிழ்ச்சான்றோர்கள் திருமிகு. வேங்கடவரதன், வி. தேவதாசன், தா.மு. பொற்கோ, அலிசேக் மீரான், பேரா. சமிரா மீரான், வெ. பாலு, கவிஞர் தமிழ்நேசன், திருக்குறள் வேலன்,  பொ. வெங்கடாசலம் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தது வளமான வரலாறு.

 

12 மார்ச் நண்பர்கள் தினம்:

1993 ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதி தொடர் குண்டு வெடிப்புகளால் மும்பை மாநகரம் ஒலமிட்டுக் கதறிய வேதனையும், மனிதகுல இறையாண்மைத் தத்துவத்தில் மனிதநேயம் அரிய பொருளாகி விடக்கூடாது என்ற எண்ண ஓட்டமும்தான், சரியாக இரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் முகில் கிழித்து எழுந்த முழு மதிபோல் இந்தியப் பேனாநண்பர் பேரவை யின் உதயத்திற்கு காரணமாயின. மானுட ஏற்ற தாழ்வுகளை மீறியொரு கல்வெட்டாய் விளங்கும் இந்த நட்புப் பாசறை துவங்கிய 12 மார்ச் நண்பர்கள் தினம் என வெகு விமரிசையாக சமூக நல நிகழ்வுகளுடன் ஆண்டுதோறும் இந்தியப் பேனா நண்பர் பேரவையால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

இந்தியப் பேனா நண்பர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருமே தமிழ் மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் என்பதால் இன, மொழி உணர்விலும் ஆர்வம் கொண்டு தமிழ் கலாச்சாரபண்பாட்டு நிகழ்வுகளிலும் தங்களை ஈடுபடுத்தி, உலகளாவிய தமிழ் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டு மொழி சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களிலும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் பங்களிப்பை தொடர்ந்துசெய்து வருகின்றனர். பரந்து வாழும் தமிழர்கள் நல்வாழ்வில் ஆர்வமும், ஈடுபாடும் காட்டி அவர்கள் மனதில் மனிதநேய சிந்தனைகளை விதைப்பதும், வளர்ப்பதும் பணியெனக் கொண்டு இந்தியப்  பேனாநண்பர் பேரவை செயல்படுகிறது.

 

பேரவையின் வளர்ச்சி:

நல்ல நண்பர்கள் உருவானால் நல்ல நாடு தானாகவே உருவாகும் என்ற உயரிய நோக்கத்தின் அசுரவளர்ச்சியாய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, கோவா, புதுதில்லி , அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபுக்குடியரசு, ரஷ்யா, இங்கிலாந்து, குவைத், மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் மனிதநேய மாண்புகளைச் சிறப்பிக்கும் வகையில் பேரவை பரந்து  விரிந்து தமிழர்கள் மனதில் அறிமுகமாகியுள்ளது.

 

பேரவையின் சமூகநல செயல்பாடுகள்:

எழுத்தால் இணைந்த இதயங்கள் அன்பு, நட்பு, மனிதநேயச் சிந்தனைகளைக் கடிதங்கள் மூலம் பகிர்ந்துகொண்ட நிலையில் பேரவையின் புதிய சகாப்தம் சமூகநல செயல்பாடுகள் என்று வளர்ச்சி பெற்று மராட்டியமாநில அரசு பதிவுச் சட்டப்படி சமூக நல அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்துநன்கொடைகளுக்கு வரி விலக்கு பெறும் வருமான வரித்துறையின் சான்றிதழ் (80G) பெற்று செயல்பட்டு வருகிறது.

மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  காப்பகங்களுக்கு மனிதநேய உதவிகளுடன், மருத்துவத் தேவையறிந்து மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் பேரவையின் சார்பாக தொடர்ந்து  வழங்கப்படுகிறது.

கண் மருத்துவப் பரிசோதனை முகாம், காது, மூக்கு தொண்டை மருத்துவப் பரிசோதனை முகாம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி முகாம், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம், கண் தான விழிப்புணர்ச்சி முகாம், இரத்த தான விழிப்புணர்ச்சி முகாம் என மக்களின் தேவைகளை உணர்ந்து ஏராளமான முகாம்களை தொடர்ந்து நடத்திவருகின்ற பெருமையும் பேரவைக்கு உண்டு. உலகப்புகழ் பெற்ற ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு கொண்டு மும்பை குடிசைப்பகுதிகளில் 31 கண் பரிசோதனை முகாம்களை நடத்தி ஏராளமானோரின் கண் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பத்மஶ்ரீ டாக்டர் எஸ். நடராஜன் அவர்களின் பூரண ஒத்துழைப்பு பேரவையின் கண் மருத்துவச் சேவைக்கு சிறப்பு சேர்த்து வருகிறது.

 

நட்புச் சங்கம விழாக்கள் (Friendship Meet):

கடிதங்கள் மூலம் கருத்துகளைப் பரிமாறும் நண்பர்கள் நேரில் சந்தித்து நட்பின் உறுதியையும், பெருமையையும் உணர களம் அமைக்க வேண்டும் என்ற எண்ண விதையின் ஆலவிருட்சமே, தொடர்ந்துசிறப்புடன் நடைபெற்று வரும் நட்புச் சங்கம விழாக்கள் (Friendship Meet). நட்புச்சங்கம விழாக்களில் பேரவை உறுப்பின நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கலந்து கொள்கின்றனர். இருநாள் நிகழ்வுகளிலும் குடும்பவிழா என்ற உணர்வு மேலோங்கி நட்புக்கு சிறப்பு சேர்க்கிறது.

மும்பையில் துவக்க விழா - 12-03-1995. தொடர்ந்து 1996 - தஞ்சை, 1997 - கோலார் தங்க வயல், 1998 - சென்னை, 1999 - கரூர், 2000 - செங்கம், 2001 - புதுக்கோட்டை, 2002 - தேனி, 2003 - திருச்சி, 2004 - நாகர்கோவில், 2005 - கோபி செட்டிபாளையம், 2006 - மைசூர், 2007 - காஞ்சிபுரம், 2008 - திருநெல்வேலி, 2009 - ஜெயங்கொண்டம், 2010 - சென்னை, 2011 - விருதுநகர், 2012 - நாகர்கோவில், 2013 - மும்பை, 2014 - சிவகங்கை, 2015 - கோவை, 2016 - ஓசூர், 2017 - நாமக்கல், 2018 - கோவா, 2019 - திருச்சி, 2022 - மாமல்லபுரம்  என 25 நட்புச்சங்கமங்கள் நடத்திய பெருமையான வரலாறு இந்தியப் பேனாநண்பர் பேரவைக்கு உண்டு.

நட்புச்சங்கம விழாவின் "அன்பு, நட்பு, மனிதநேயம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் வலியுறுத்தும் அமைதிப்பேரணி" மூலம் மாறுபாடுகளை மறந்து மாண்புடன் வாழும் அற்புதக் கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகமாக நம் பேரவை விளங்குகிறது. அமைதிப்பேரணி, கலை இலக்கிய கருத்துரையாடல், 10வது, 12வது வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, ஆதரவற்றோர் இல்லம் / மனநலம் குன்றியோர் இல்லம் / முதியோர் இல்லம் / தொழுநோயாளிகள் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று நல உதவிகள் வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் அந்த ஓராண்டுப் பணிகளை உள்ளடக்கிய சிறப்புமலர் வெளியீடு என சங்கம விழா நிகழ்வுகள் அமைகின்றது.

 

நட்புச்சங்கம விழா, பங்கேற்ற சான்றோர் பெருமக்கள்:

சரித்திர சாதனையாக நடைபெற்று வரும் நட்புச்சங்கம விழாக்களில் "இதழியல் போராளி"  நக்கீரன் ஆர். ஆர். கோபால், செவாலியர் வி. ஜி. சந்தோசம், பாவலர் கொ. வி. நன்னன், பேராசிரியர் கு. வணங்காமுடி, வளர்தொழில், தமிழ் கம்ப்யூட்டர் பத்திரிகைகளின் ஆசிரியர் தன்னம்பிக்கைச் சுடரொளி சு. ஜெயகிருஷ்ணன், காவல் துறை ஆணையாளர் திருமதி. திலகவதி ஐ. பி. எஸ், தமிழ்தொண்டர் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், முன்னாள் அமைச்சர் கு. ப. கிருஷ்ணன், சாகித்ய அகடமி விருதுநர் பொன்னீலன், காவல்துறை ஆணையாளர் பி. தங்கராஜன் ஐ. பி. எஸ், வைரமாலை அந்தோணி சாமி, மைசூர் தமிழ்ச்சங்க செயலாளர் கு. புகழேந்தி, சிவமுகா தமிழ்ச்சங்க தலைவர் சி. தண்டபாணி, காஞ்சி அரிமா இ. ஜீவா, காஞ்சி தொழிலதிபர் எம். எம். அண்ணாமலை, மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர்   திருமதி. வெ. ராதிகா செல்வி, பம்பாய்தென்னிந்திய ஆதி திராவிட மகாஜன சங்கத் தலைவர் கே. வீ. அசோக்குமார், சின்னத்திரை பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட சமூக சேவகி திருமதி. எஸ். பி. ஜோதி, கவிஞர் முனைவர் திருமதி. தமிழச்சி தங்க பாண்டியன், திரைப்பட இயக்குநர் வி. சேகர், பிரான்ஸ் தமிழ்ப் பேரவை தலைவர் பாரீஸ் பார்த்தசாரதி, ரூபன் கல்வி அறக்கட்டளை தலைவர் முனைவர் எம். ரூபன், பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனர் - செயலாளர் கல்வித் தந்தை வி. தேவதாசன், மும்பை காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி சேர்மன் ஏ. ராமராஜா , கொடைக்கானல் பண்பலை வானொலி நிலைய இயக்குனர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ். துரைசாமி, சென்னை திருவள்ளுவர் திருமடம் தலைவர் கோ. பெரு. திருவரங்கன், ஶ்ரீரிஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணைப் பொது மேலாளர் தி. குணசேகரன், ஓசூர் தேவாஸ் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சாத், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஸன் சேர்மன் கொ. வெ. கணேசன், உலக சமுதாய சேவா சங்கம் சேலம் மாவட்டத் தலைவர் உழவன் எம். தங்கவேலு, கோவா மாநில சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் கோ. அன்பழகன், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராம கிருஷ்ணன், தில்லி தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் இரா. முகுந்தன், தஞ்சை பாரத் கல்விக் குழுமம் தாளாளர் திருமதி. புனிதா கணேசன், வேந்தர் கோ. விஸ்வநாதன் (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்)எழுத்துச் செல்வர் முனைவர் லேனா தமிழ்வாணன் ஆகிய சான்றோர் பெருமக்கள் சிறப்பு மலர்களை வெளியிட்டும், பெற்றும் வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது இந்தியப் பேனாநண்பர் பேரவையின் வளமான வரலாறு.

 

கல்விப் பணி, மருத்துவ உதவி:

கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை மாணவ மாணவியரின் தரம் அறிந்து கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பான கல்வி அறிவு பெற்றும் மேற்படிப்பு படிக்க வசதியில்லாத மாணவ மாணவியருக்கு முழுமையான ஆண்டு கல்விக் கட்டணத்தை பேரவை ஏற்று கல்வி அளிப்பதும் பேரவையின் தொடர் கல்விப் பணிகளாகும். மருத்துவச்செலவுகளுக்காக வருந்தும் ஏழை மக்களின் வேண்டுகோள் பரிசிலீக்கப்பட்டு முடிந்த அளவுக்கு மருத்துவ உதவிக் தொகைகளும் அவ்வப்போது பேரவை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.